மதுரையில் பிரம்மாண்ட நூலகம் கட்டப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி

மதுரையில் பிரம்மாண்ட நூலகம் கட்டப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி
Updated on
2 min read

மதுரைக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் அறிவித்த கருணாநிதி நினைவு நூலகம் அமைப்பதற்காக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 6 இடங்களை ஆய்வு செய்தார். நூலகம் அமைய உள்ள இடத்தை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்வார் எனத் தெரிவித்தார்.

சென்னை அண்ணாநூற்றாண்டு நூலகம் போன்ற பிரம்மாண்ட நூலகத்தை ரூ.70 கோடியில் மதுரைக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நூலகம் அமையப்பெற்றால் தென் மாவட்ட படித்த இளைஞர்கள், போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்கும், உயர்கல்வி ஆய்வுப் படிப்புகளுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான இளைஞர்கள் அரசு நுழைவுத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று அரசுப் பணிகளுக்கு செல்ல பெரும் வாய்ப்பாக அமையும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது என்றும், அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுகள் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது மதுரையில் இந்த நூலகம் எந்த இடத்தில் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நூலகம் பள்ளி கல்வித்துறை சார்பில் அமைக்கப்படுகிறது.

அதனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மதுரையில் இந்த நூலகம் அமைப்பதற்கு சாதகமான 5 இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அவருடன் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

இந்த ஆய்வில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ்நிலையம் அருகில் உள்ள 10 ஏக்கர் நிலம், உலக தமிழ் சங்கம் கட்டிடம் வளாகத்தில் உள்ள 2.90 ஏக்கர் நிலம், மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் உள்ள 1.69 ஏக்கர் நிலம், மதுரை மாநகராட்சி பொது பண்டகசாலை அருகே உள்ள 1.09 ஏக்கர் நிலம், மீனாட்சியம்மன் கோயில் வாகன நிறுத்துமிடம் அருகே 70 அடி சாலை அருகே உள்ள 2.63 ஏக்கர் நிலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எல்லீஸ் நகர் 70 அடி சாலை அருகே உள்ள 1.15 ஏக்கர் நிலம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

இதில், அனைத்துப்பகுதி நிலத்தின் வரைபடம், அதன் அருகே செல்லும் விசாலமான சாலை வசதி, மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எளிதாக வந்து செல்லும் நகர்ப்பகுதி உள்ளிட்ட சாதக, பாதக அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யொமொழி, உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

இதில், மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் நூலகம் அமைவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே இடத்திற்கு மட்டும் சென்று விட்டு இடத்தை தேர்வு செய்துவிடக்கூடாது என்பதற்காக, மற்ற இடங்களையும் பார்த்துவிடுவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாலேயே அந்த இடங்களுக்கு இந்த குழுவினர் சென்று பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி சென்னையில் அண்ணாநூற்றாண்டு நூலகம் அறிவித்து கட்டினார். இந்த நூலகம் ஆசியாவின் இரண்டாவது பிரமாண்ட நூலாக திகழ்கிறது.

தற்போது அதுபோன்ற பிரம்மாண்ட நூலகத்தை கருணாநிதி நினைவாக முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் கருணாநிதி நூலகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். சுமார் 2 லட்சம் சதுர அடியில் ரூ.70 கோடியில் இந்த நூலகம் கட்டப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், உயர்கல்வி ஆராய்ச்சி மாணவர்கள், இளைஞர்கள், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த நூலகம் அமையும். எதிர்கால சந்ததியினருக்கு அறிவொளி தருகிற கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் அமைக்கப்படும். அறிவித்தவுடன் இந்த நூலகத்தை கட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டது.

தற்போது நாங்கள் பார்த்த 5 இடங்களைப் பற்றியும் முதல்வருக்கு அறிக்கையாகக் கொடுக்க உள்ளோம். இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுத்து இடத்தைத் தேர்வு செய்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in