

விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணானதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, மழையால் நெல் வீணாகாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் அறிக்கை ஒன்றை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தாக்கல் செய்தார்.
அதில், நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லைப் பாதுக்காக்க முடியும் எனவும், அவை படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அறிக்கையைப் பதிவு செய்த நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களிலிருந்து தூரத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் போக்குவரத்துச் செலவு, அலைச்சல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தினர்.
அதற்கு தமிழக அரசுத் தரப்பில், இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து வெகுதூரங்களில் உள்ள குறிப்பாக சிறிய விவசாயிகளின் விளைபொருட்களைக் கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.