

கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்ததாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மீது இதுவரை 50 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
''கோவையில் கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்ததாக புகாருக்குள்ளான 2 தனியார் மருத்துவமனைகள் குறித்து முந்தைய மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகள் குறித்துப் பெறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க 3 இணை இயக்குநர்கள் அடங்கிய தனிக் குழு அமைக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை அறிக்கை புதிய ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும். கரோனா நோயாளிகளை அனுமதிக்க 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை தொடர்கிறது.
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கான கிசிச்சைக் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. அரசு அறிவித்துள்ள தொகையைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது மாவட்ட நிர்வாகத்தின் கரோனா கட்டுப்பாடு மையத்தை 0422-1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
மேலும், covidcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, 94884 40322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் எண் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.
இதுவரை, மின்னஞ்சல், வாட்ஸ் அப், அஞ்சல் என கோவையில் உள்ள மருத்துவமனைகள் மீது மொத்தம் 50 புகார்கள் பெறப்பட்டுள்ளன. புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.