புதுச்சேரி பேரவையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகத் தீர்மானம்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை

புதுச்சேரி பேரவையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகத் தீர்மானம்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை
Updated on
1 min read

சட்டப்பேரவையைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று கூறுகையில், ''தமிழகத்தின் டெல்டா பகுதிகளிலும், புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை, சங்கராபரணி ஆற்றுப்படுகை மற்றும் கடல் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. இதற்காக டெண்டர் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதால் வேளாண் நிலங்கள் சேதமாகும், கடல் நீர் உட்புகும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், கடலில் மீன் வளம் குறையும். ஆனாலும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பு உள்ள திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து, விரைந்து செயல்படுத்தவும் தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்ததுடன், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு உடனடியாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கடிதம் எழுத வேண்டும். விரைவில் சட்டப் பேரவையைக் கூட்டி புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானமும் கொண்டுவர வேண்டும். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனைத்து விஷயங்களிலும் அமைதி காத்து வருவதைப் போல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் விஷயத்தில் அமைதி காக்கக் கூடாது" என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in