மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முன் ஆய்வுப் பணிகள் விரைவில் முடிவடையும்: மத்திய அரசு தகவல்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முன் ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் முன் ஆய்வுப் பணிகள் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ். இவர் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 3 ஆண்டுக்கு பிறகு 2018-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் மோடி மதுரைக்கு நேரில் வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டுச் சென்றார்.
இருப்பினும் கட்டுமானப் பணி தொடங்கவில்லை. இதையடுத்து கட்டுமானப் பணியை விரைவில் தொடங்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த வழக்கில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும் 45 மாதங்களில் கட்டுமானப்பணிகள் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2018-ல் மத்திய அமைச்சரவை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இருப்பினும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. வேறு கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.
இதனால் தமிழக மக்கள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராமல் போய்விடுமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். கரோனா பரவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தநேரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இருந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.
தென் மாவட்டங்களில் உள்ள பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் வரவிடாமல் தடுத்து வருகின்றன. தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு எய்ம்ஸ் திட்டத்தை நிறைவேற்றாமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசின் செயலர் பி.வி.மோகன்தாஸ் பதில் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 17.12.2018-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில மண் பரிசோதனை, சுற்றுச்சுவர் கட்டுதல், ஏரியல் ஆய்வு உள்ளிட்ட முன் ஆய்வுப் பணியை மேற்கொள்ள ஹிடேஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
முன் ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடையும். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் கடன் உதவியுடன் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நாளிலிருந்து 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் மற்றும் மத்திய அரசு இடையே கடந்த மார்ச் 26-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கும் திட்டதுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
