காவல்துறையினர் மன அழுத்தமின்றிப் பணிபுரிய யோகா, தியானம்: புதுக்கோட்டை எஸ்.பி. நிஷா தகவல்

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்.
Updated on
1 min read

காவல் துறையினர் மன அழுத்தமின்றிப் பணிபுரிவதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் எனப் புதுக்கோட்டையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த எல்.பாலாஜி சரவணன், சென்னை துணை ஆணையராக மாற்றப்பட்டதையடுத்து, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த நிஷா பார்த்திபன், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

புதுக்கோட்டையில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர், செய்தியாளர்களை இன்று (ஜூன் 17) சந்தித்துக் கூறும்போது, ''அதிகரித்து வரும் போக்சோ வழக்குகள், குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கு, பெற்றோர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டோர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல் கடத்தல், சாராயம், கஞ்சா, லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தனிப்படை அமைத்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படும்.

மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பில் பாலியல் குற்றங்களைத் தடுக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் துறையினர் மன அழுத்தமின்றிப் பணிபுரிவதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளை 72939 11100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்'' என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in