கரோனா ஊரடங்கால் முடங்கிய மதுரை சக்கிமங்கலம் 'பூம்பூம் மாட்டுக்காரர்கள்':உதவிக்கரம் நீட்டிய ‘திருநகர் பக்கம்’ இளைஞர்கள்

கரோனா ஊரடங்கால் முடங்கிய மதுரை சக்கிமங்கலம் 'பூம்பூம் மாட்டுக்காரர்கள்':உதவிக்கரம் நீட்டிய ‘திருநகர் பக்கம்’ இளைஞர்கள்
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிய மதுரை சக்கிமங்கலம் பூம்பூம் மாட்டுக்காரர்களும், அவர்கள் மாடுகளும் பசியால் வாடி வந்தநிலையில் அவர்களுக்கு ‘திருநகர் பக்கம்’ இளைஞர்கள், உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் 100க்கும் மேற்பட்ட நாடோடிப் பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பழக்கப்படுத்தபட்ட பூம்பூம் மாடுகளை, அலங்காரப் போர்வை போர்த்தி அலங்கரித்து, அதன் கால்களில் மணி கட்டி கிராமங்களில், நகரங்களில் கோயில் விழாக்களில், மக்கள் கூடுமிடங்களில் சென்றும், வீடு வீடாகச் சென்றும் குறி சொல்லும், வித்தை காட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.

இவர்கள் பழக்கப்படுத்தியதற்கு ஏற்ப பூம்பூம் மாடுகள், தன்னை வழிநடத்துபவர் வாழ்த்து மொழிக்கேற்பவும், கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்று தலையாட்டி அசைவுகளை வெளிப்படுத்தும்.

மக்கள், இந்த நாடோடி மக்கள் நற்செய்தி கூறி நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கும், மாட்டின் தலை, கால் அசைவுக்கும் சில்லறையை காணிக்கையாக வழங்குவர்.

சிலர் மாட்டுக்கு உணவும் அரிசியும் வழங்குவார்கள்.

ஆனால், இந்த கரோனா கால ஊரடங்கு மக்கள் வீட்டிற்குள் முடங்கிப்போனதால் இந்த நாடோடி மக்களுடைய பிழைப்பும் முடங்கிப்போனது. தங்கள் பசியுடன் மாட்டின் பசியையும் இவர்கள் போக்க முடியாமல் தவித்து வந்தனர்.

தகவல் அறிந்த திருநகர் பக்கம் இளைஞர்கள் குழுவினர், வாகனங்களில் இந்த நாடோடி மக்களுடைய பூம்பூம் மாடுகளுடைய பசியைப் போக்க அதற்குத் தேவையான வைக்கோல் வாங்கிக் கொடுத்தனர். மேலும், அந்த மக்களுடைய பசியைப் போக்க அரிசியும் மளிகைப்பொருட்களும் வாங்கிக் கொடுத்தனர்.

இதுகுறித்து அந்த நாடோடி மக்கள் கூறுகையில், ‘‘அந்தப் பசங்க செஞ்ச உதவி எங்க வயிறு நெறஞ்சிடுச்சு. எங்க மாட்டுக்கு பசிக்குது என்று சேதி கேட்டு கட்டு கட்டாக வைக்கோல் கொண்டு வந்து குடுத்துட்டாங்க. எங்க மனசும், மாடுகளோட வயிறும் நெறைஞ்சுருச்சு. அவங்களுக்கு எப்படி நன்றி சொல்லவதுன்னு தெரியல ’’ என்றனர்.

திருநகர் பக்கம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், கரோனா முதல் அலையைப் போல் இந்த இரண்டாவது அலையிலும் ஆதரவற்றவர்கள், சாலையோர மக்களுக்கு தினமும் சாப்பாடு தயார் செய்து வழங்குவது, வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் கொடுத்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

அத்துடன் இதுபோன்ற வாயில்லா ஜீவன்களுக்கும், அவர்களைப் பராமரிப்போருக்கும் உதவி செய்து உன்னதமான சேவை செய்து கொண்டிருப்பது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in