பாமக நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை: ராமதாஸ் எச்சரிக்கை

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

பாமக நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கை:

"பாமக ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பாமகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாகப் பழகி வருபவர்கள் என்பதுதான் நாம் பெருமைப்படும் விஷயமாகும். அண்மைக்காலமாக பாமக மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரான இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த எவரும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கைக் கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொறுப்பாளர்கள் மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராகப் பதிவிட்டால், அத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in