Published : 17 Jun 2021 01:14 PM
Last Updated : 17 Jun 2021 01:14 PM

இன்னும் 92.5% தடுப்பூசிகள்; இதுதான் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த மிக முக்கியமான வழி: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மூன்றாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கரோனா நோயின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது என்றும், இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருவதால், 'வருமுன் காப்போம்' என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம்.

முதல் அலையின்போது, அதாவது 2020-ம் ஆண்டு, இந்தியாவில் ஒரு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 97,000 என்ற அளவில் இருந்தது. இரண்டாவது அலையின்போது, அதாவது 2021ஆம் ஆண்டு, ஒரு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், முதல் அலையின்போது ஒரு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 7,000 என்ற அளவில் இருந்தது. இரண்டாவது அலையின்போது ஒரு நாள் பாதிப்பு 36,000 என்ற அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக, இதைச் சமாளிக்கும் அளவுக்கு சுகாதாரக் கட்டமைப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டு ஒரு நாள் உயிரிழப்பு என்பது அதிகரித்தது.

பல்வேறு நாடுகளில், ஒரு அலையின் தாக்கம் அதன் முந்தைய அலையைவிடத் தீவிரமாக இருந்துள்ளது. இரண்டாவது அலையின் தாக்கம் நமக்குக் கடுமையான விளைவுகளை உண்டாக்கி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம். இதை வைத்துதான் கரோனா மூன்றாவது அலையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடியும். இந்த முன்கணிப்பு மாதிரிகளுக்கு கரோனா நோயினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் அவசியம். இதை வைத்து, எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை, மருத்துவ உபகரணங்களைத் தயார் செய்து கொள்வதற்கான முடிவுகளை எடுக்க முடியும்.

கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் இருக்கும் என்பதால், இவர்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் எத்தனை பேர் என்பதைக் கண்டறிந்து, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு எவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்தவும், இதனைத் தொடர்ந்து, அனைத்துத் தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தமிழ்நாட்டில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தம் 1,12,64,069 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் மக்கள்தொகை தற்போது கிட்டத்தட்ட 8 கோடி என்று எடுத்துக்கொண்டாலும்,16 கோடி தடுப்பூசிகள் நமக்குத் தேவை. இதில், 1,12,64,069 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 14,87,35,931 தடுப்பூசிகள் இன்னமும் செலுத்தப்பட வேண்டும்.

அதாவது, இதுவரை 7.5 விழுக்காடு தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டிருக்கின்றன. இன்னமும், 92.5 விழுக்காடு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இதுதான் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த மிக முக்கியமான வழி.

இது மட்டுமல்லாமல், மூன்றாவது அலையைத் தடுக்கும் நோக்கில் கரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், கரோனா உறுதியானவர்களின் இருப்பிடம் அறிந்து, அவர்களைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்துதல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை 14 நாட்கள் விலக்கி வைத்தல், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல், தனிமனித இடைவெளியைப் பராமரிக்கும் வகையில் பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்தல், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடிப்பதும் அவசியம்.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, மூன்றாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், கரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வராமலிருப்பதற்கான கட்டுப்பாடு பொதுமக்களிடம்தான் இருக்கிறது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x