Last Updated : 17 Jun, 2021 12:43 PM

 

Published : 17 Jun 2021 12:43 PM
Last Updated : 17 Jun 2021 12:43 PM

வேளாண் பல்கலை. நூலகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம்: சர்ச்சையைத் தொடர்ந்து படம் மாற்றம்

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம்.

கோவை 

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்படம் மாற்றப்பட்டது.

கோவை மருதமலை சாலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலைப் பிரிவில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியில் நூலகம் உள்ளது. இந்த நூலகத்தின் நுழைவுப் பகுதியில், பல்கலைக்கழகத்தின் சார்பில், சுமார் இரண்டு அடி உயரத்தில் திருவள்ளுவர் படம் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. அந்தப் படத்துக்குக் கீழே திருக்குறளும் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், திருவள்ளுவர் காவி நிற உடையணிந்து இருப்பதுபோல் அமைக்கப்பட்டு இருந்தது. அண்மையில் மேற்கொண்ட பராமரிப்புப் பணியின்போது இந்தப் படம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களுக்குப் பொதுவானவரான திருவள்ளுவர் எவ்வித சமயச் சார்பற்றவர் என்பதைக் குறிக்கும் வகையில், வெள்ளை உடையணிந்து உருவகப்படுத்தப்பட்டு தமிழக அரசு சார்பில் முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழக நூலகத்தில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்குத் தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றப்பட்டு வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படத்தை இன்று (ஜூன் 17) பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பொருத்தினர்.

வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம்.

பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் முரளி அர்த்தனாரி கூறும்போது, "பழைய படம் 2015-ம் ஆண்டு இருந்த நிர்வாகத்தின்போது வைக்கப்பட்டது. தற்போது வைக்கப்படவில்லை. இருப்பினும், சர்ச்சையைத் தொடர்ந்து பழைய படம் அகற்றப்பட்டது. வெள்ளை உடையணிந்த புதிய படம் வைக்கப்பட்டது" என்றார்.

இது தொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில், "கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017-18ஆம் ஆண்டு அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்துப் பேசி இப்போது அந்தப் படத்தை அகற்றிவிட்டு, தமிழக அரசின் அதிகாரபூர்வமான திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x