பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் அதிகாரத்தை ஆணையருக்கு மாற்றும் அரசாணை: எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் அதிகாரத்தை ஆணையருக்கு மாற்றும் அரசாணை: எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அதிகாரங்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்துள்ளது.

அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநராகவும், பின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு வந்தனர்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரியை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகம் கண்காணிக்கப்பட்டது. ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உள்ள நிலையில், எந்தவித சிறப்புத் தகுதியும், அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு. ஆணையருக்கு பதிலாக கல்வித்துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குநராக நியமிக்க வேண்டும்'' எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, விசாரணை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in