Published : 17 Jun 2021 11:46 AM
Last Updated : 17 Jun 2021 11:46 AM

ரேஷன் கடையில் கரூர் ஆட்சியர் ஆய்வு: விற்பனையாளர் மக்களைக் காக்கவைத்ததால் மன்னிப்பு கோரினார்

கரூரில் மாவட்ட ஆட்சியர் வருகைக்காக பொருட்களை விநியோகம் செய்யாமல் மக்களை விற்பனையாளர் காத்திருக்க வைத்ததால், வரிசையில் காத்திருந்தவர்களிடம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 592 நியாயவிலைக் கடைகளில் கடந்த 15-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-ம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

கரூர் ஜவஹர் பஜாரில் அம்மா மருந்தகம் அருகேயுள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று (ஜூன் 17) திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் காலை 9.36-க்கு ஆய்வுக்கு வந்த நிலையில், அதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்களை வழங்காமல் மக்கள் வரிசையில் காத்திருக்க வைக்கப்பட்டனர்.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் கண்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், "பொருட்கள் விநியோகம் செய்யவில்லையா? எதற்காக மக்களைக் காக்க வைத்திருந்தீர்கள்?" என விற்பனையாளரிடம் கேட்டார். அதன்பின், அங்கு பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருந்தவர்களிடம் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

"பொருட்கள் விநியோகம் நடைபெறுவதை ஆய்வு செய்யவே வந்தேன். பொருட்கள் விநியோகம் செய்யாமல் உங்களைக் காக்கவைத்தது தெரியாது. எனவே, தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

"எவ்வளவு நேரமாக காத்திருக்கிறீர்கள்" என அங்கு நின்றிருந்த பெண்களிடம் கேட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். "டோக்கன்கள் முறையாக விநியோகம் செய்யப்பட்டதா? ரேஷன் கடைகளில் மரியாதையாக நடத்துகிறார்களா? அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா?" என வரிசையில் நின்றவர்களிடம் கேட்டார்.

மேலும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து இடைவெளி விட்டு வட்டங்களில் வரிசையில் நிற்கவும் மக்களை அறிவுறுத்தினார். ஆண்கள், பெண்களுக்குத் தனி வரிசையா? ஒரே வரிசையா எனவும் கேட்டறிந்தார்.

பின்னர், ஆட்சியர் த.பிரபுசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நியாயவிலைக் கடைகளில் வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள சிக்கல்கள் குறித்து முழு ஆய்வு செய்யப்படும்.

மேலும், மளிகைத் தொகுப்புகள் வழங்குவதில் சில பொருட்களின் எடை குறைந்த அளவில் வருவதாகக் கூறப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தவறுகள் களையப்படும். தவறுகள் செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் முட்டைகள் குறைவாக வழங்கப்படுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். பொதுமக்கள் அனைத்து வகையான புகார்களைத் தெரிவிப்பதற்கு வாட்ஸ் அப் எண் தெரிவிக்கப்படும்" என்றார்.

அப்போது, கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான குறைகளைக் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x