ஹைட்ரோகார்பன்; தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியினை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியினை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை தொடங்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று (ஜூன் 16) ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், ஏற்கெனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபோதும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

எனவே, மத்திய அரசு ஹைட்ரோகார்பன் பணிகளை தமிழகத்தில் அனுமதித்தாலும், அதனை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

அரியலூர் மாவட்டம் முழுவதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில், மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவப்பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரோனா காலத்தில் இருப்பதால் நோய்த்தடுப்புப் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டம் தொடங்குவது குறித்து, தமிழக அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடன் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in