Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை: வரைபடம், மதிப்பீடுகளை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை

மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம், சென்னையில்ரூ.250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்களுக்கான மதிப்பீடுகள், வரைபடங்களை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ளநெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சிமைய வளாகத்தில் பொதுப்பணித்துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா, சிறப்பு செயலாளர் கு.அசோகன், முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 37 துறைகளில் நிதித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய இரு துறைகள்தான் அனைத்து துறைகளின் தேவைகள், பணிகளையும் மேற்கொள்ளும். தமிழகத்தில் உள்ளஅனைத்து மருத்துவமனை களிலும், கரோனா வார்டுகளுக்கு தேவையான கழிப்பறை வசதிகள், ஆக்சிஜன் இணைப்பு குழாய்களுக்கான பணிகள், மின் விசிறிகள், மின்விளக்குகள் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக போர்க்கால அடிப்படையில் 11,993 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்திய அனைத்து பொறியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

தற்போது 11 இடங்களில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் கட்டிடப் பணிகளை விரைவாக முடித்து,நடப்பாண்டில் மாணவர்களை சேர்க்க வசதி ஏற்படுத்த வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிகளையும் முடிக்க வேண்டும்.

சென்னையில் ரூ.250 கோடிமதிப்பில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர்நினைவு நூலகம், கி.ராஜநாரா யணனுக்கு கோவில்பட்டியில் கட்டப்பட உள்ள மணிமண்டபம் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகள், வரைபடம் ஆகியவற்றை விரைவாக இறுதி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பராட்டினார். அதேபோல் பாராட்டும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைய வேண்டும்.

அனைத்து கட்டுமானப் பணிகளும் நல்ல தரத்துடன், உறுதியுடனும் கட்டப்பட வேண்டும். கட்டிடப் பணி நடக்கும்போது, கட்டுமானப் பொருட்களுக்கான தரப்பரிசோதனை அறிக்கைகளும் பணி நடக்கும் இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x