

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியாக 5.68 கோடி பேர் உள்ள நிலையில், இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவை உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 5.68 கோடி தகுதியான நபர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 11 கோடியே 36 லட்சம் அளவில் தடுப்பூசி போடவேண்டும். இதுவரை 1 கோடியே6 லட்சத்து 65 ஆயிரத்து 464பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி கிடைத்தால்தான், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தமுடியும். தேவையான தடுப்பூசியை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம்.
தமிழகத்தில் முதல்வர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமாக, அதிகாலை முதலே வரிசையில் நின்று, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகம் முழுவதும் புதிதாக 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 3,200 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் உடனிருந்தனர்.