Last Updated : 17 Jun, 2021 03:11 AM

 

Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்படுமா? - சிறு, குறு தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

கோப்புப்படம்

கோவை

கோவை உட்பட ஊரடங்கு தளர்வுகள் குறைவான மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கூடுதல் கால அவகாசம்வழங்க வேண்டும் என்ற சிறு, குறுதொழில் துறையினர் எதிர்பார்க் கின்றனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர்,ஈரோடு உட்பட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கில் சில தளர்வுகள்மட்டும் கூடுதலாக அறிவிக்கப்பட் டன. ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கான மூலப்பொருட்கள் தயாரித்து அளிக்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும், கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பிற 27 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங் களில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், வெட்கிரைண்டர், ரயில்வே, ராணுவ தளவாடம், கப்பல் தயாரிப்பு உதிரிபாகங்கள் மற்றும் ஜவுளித்துறை உற்பத்திக்கான இயந்திரங்கள் தயாரிப்பு நடைபெறும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்படாத நிலையில் உள்ளன. விசைத்தறி கூடங்களும் முடங்கியுள்ளன.

இதனால், மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்வழங்க வேண்டும் அல்லது 2 மாதங்களுக்கான மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர். கோவையில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள், மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளன.

இதுகுறித்து, நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக் கப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதால், மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் தேவைப்படாது என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்து கோவை தொழில் துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கட்டிட வாடகை, வீட்டு வாடகையை செலுத்த முடியவில்லை. மின் கட்டணத்தையும் செலுத்த இயலாத நிலை உள்ளது. எனவே, மின் கட்டணத்தை செலுத்த கூடுதலாக கால அவகாசம் தர வேண்டும். கடந்த 15-ம் தேதியே மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. எனவே, அரசு அனைத்து மாவட்டங்களையும் ஒன்றாக பார்க்காமல், தளர்வுகள் குறைவாக உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிலையை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சி.பழனிசாமி கூறும்போது,“கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவால் 2.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ளன. வருமானமின்றி தவிக்கும் சிறு, குறு விசைத்தறியாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) சார்பில், அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் நேற்று அளித்த மனுவில்,‘‘கோவையில் ஊரடங்கு அதிக நாட்களுக்கு நீடிப்பதால் குறு, சிறு தொழில்கள் அனைத்துக்கும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கெனவே பதிவான மின் கட்டணத்தை செலுத்த, தொழில் நிறுவனங்கள் இயங்கும் தேதியில் இருந்து ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x