

நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதிமுறையால் தங்கத்தில் கலப்படம் செய்வது தடுக்கப்படும் என பொதுமக்கள், வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தைக் கண்காணிக்க 2000-ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4 லட்சத்துக்கும் மேல் நகை விற்பனையாளர்கள் உள்ளனர். ஆனால் பெரிய நகைக் கடைகளைத் தவிர, பெரும்பாலான விற்பனையாளர்கள் தர நிர்ணய அங்கீகாரம் பெறாத தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தங்க நகைகளில் கலப்படம் அதிகமாக உள்ளது.
எனவே, நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையிட்டு விற்பனை செய்வது கட்டாயம் என்ற விதியை மத்திய அரசு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘நகைக் கடைகளில் தங்கம் விலை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால், நகைகளின் தரம் அப்படி இல்லை. வாங்கிய நகையை அடுத்த சில மாதங்களில் விற்பனை செய்யச் சென்றால் மிகவும் குறைந்த விலையில் வாங்குகிறார்கள். கேட்டால், தங்க நகையின் தரம் வேறுபடுகிறது என்கின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசின் இந்த புதிய விதிமுறை தரத்தை உறுதிப்படுத்துவதோடு, நுகர்வோரையும் பாதுகாக்கிறது’’ என்றனர்.
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘ஓரளவுக்கு பெரிய நகைக் கடைகளில் ஹால்மார்க் தர முத்திரையிடப்பட்ட நகைகள் விற்கப்படுகின்றன. தற்போது, இந்த விதியை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், தங்க நகையில் கலப்படம் செய்வதைத் தடுக்க முடியும்’’ என்றார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் துணை தலைவர் பி.ஏ.ரமேஷ் பாபு கூறும்போது, ‘‘மத்திய அரசின் இந்த புதிய விதிமுறை வரவேற்கத்தக்கது. கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதால், பொதுமக்கள் திருமணங்களுக்காக நகைகள் வாங்கும் வகையில், வழிமுறைகளை வகுத்து நகை கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.