

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில், கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது.
தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்ததால், தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கடந்த திங்கள்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோர் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால், திங்கள்கிழமை ரூ.164.87 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின.
தொடர்ந்து, 2-ம் நாளான நேற்று முன்தினம் ரூ.130 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தமாக 2 நாட்களில் ரூ.294 கோடியே 87 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின.
இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்றும் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொற்று அதிகரித்துள்ள 11 மாவட்டங்களில் கடைகள் திறக்கப்படாததால், அருகிலுள்ள மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.