Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM

சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு வந்தது: பால்வளத் துறை அமைச்சர் மலர் தூவி வரவேற்றார்

சென்னை குடிநீருக்காக, ஆந்திரமாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று காலை தமிழக எல்லைக்கு வந்தது. அதை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என சமீபத்தில் ஆந்திர அரசிடம், தமிழக அரசுகோரிக்கை வைத்தது. அதன் விளைவாக, சென்னை குடிநீருக்காக கடந்த 14-ம் தேதி காலை முதல், கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி கிருஷ்ணா நீரை, கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு திறந்து வருகிறது.

அந்நீர், கண்டலேறு அணையிலிருந்து 152 கி.மீ. தொலைவில் உள்ள தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்று காலை 8 மணியளவில் வந்தடைந்தது.

அப்போது, விநாடிக்கு 40 கனஅடி என வந்த கிருஷ்ணா நீர், படிப்படியாக அதிகரித்து, காலை 9.30 மணியளவில் விநாடிக்கு 90 கன அடி என வந்து கொண்டிருந்தது. அதை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

இந்நிகழ்வில், நீர்வளத் துறையின் பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தைய்யா, திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, மதுரவாயல் மற்றும் பொன்னேரி ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்களான டி.ஜெ.கோவிந்தராஜன், வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன், கணபதி, துரை. சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஷ்வரி, துணைத் தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது:

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 11.757 டிஎம்சி ஆகும். தற்போது இந்த ஏரிகளில் 6.607 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர அரசு வழங்கும் 2021-22-ம் நீராண்டுக்கான முதல் தவணையான 8 டிஎம்சி கிருஷ்ணா நீர் விரைவில் வரவுள்ளது.

கிருஷ்ணா நீர் மூலம் பூண்டி ஏரியின் நீர் இருப்பு அதிகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு சென்னையின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். பூண்டி ஏரியின்சீரமைப்பு பணிக்காக ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மதகுகள் சீரமைத்தல் உள்ளிட்ட 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஜீரோ பாயிண்டுக்கு வந்துள்ள கிருஷ்ணா நீர், அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று அதிகாலை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x