

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு முழுமையாக வழங்கு வதில்லை என புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணம் 2-வது தவணை ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று முன்தினம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் 14 வகை பொருட்கள் அனைத்தும் வழங்காமல் குறைந்த அளவே வழங்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.
இதனிடையே செஞ்சி அருகே தேவனூர் கூட்டுறவு ரேஷன் கடையில் 14 வகையான மளிகைப் பொருட்களுக்கு பதிலாக 12 பொருட்கள் வழங்கிய கடை விற்பனையாளர் கர்ணன் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் மணி நகரில் உள்ள ரேஷன் கடையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பில் குறைவான பொருட்களே வழங்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ரேஷன் கடை முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் விழுப்புரம் மணிநகர் ரேஷன் கடை விற்பனையாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பிரபாகரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் முழுமையாக வழங்கப்படுகிறதா என விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, "விழுப்புரம் மாவட்டத்திற்கு இதுவரை 35 சதவீத மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் முழுமையாக வந்துவிடும். வந்துள்ள 14 வகையான மளிகைப் பொருட்களை கணக்கிட்டு, சோதனை மேற்கொண்டுதான் கடைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இதில் தவறேதும் நடைபெற வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.