

``பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை இணைக்கும் பணி, தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் மேற்கொள்ளப்படும்” என, தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணையிலிருந்து, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பாசனத்துக்கு, அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயிலிருந்து, தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குமரியில் தொடர்ந்து பெய்த கனமழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. எனவே, வறண்ட பகுதியான ராதாபுரம் பகுதி குளங்களுக்கு வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை விநாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம், லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார்குளம், அழகனேரி, தனக்கர்குளம், கூடங்குளம், பரமேசுவரபுரம் உட்பட ராதாபுரம் தாலுகா கிராமங்களில் நேரடியாக 15,987 ஏக்கரும், 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1,013 ஏக்கரும் பயன்பெறும்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளை இணைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன். பாபநாசம் அணை கடல் மட்டத்திலிருந்து 264 அடி உயரத்திலும், மணிமுத்தாறு அணை கடல்மட்டத்திலிருந்து 109 அடி உயரத்திலும் இருக்கிறது. இரு அணைகளுக்கிடையேயும் 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இரு அணைகளையும் இணைக்கும் பணிகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக முதல்வரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும். முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின்பு விரைவில் இரு அணைகளையும் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இப்பணிகள் நிறைவடைந்தால் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து, வறண்ட பகுதியான நாங்குநேரி, ராதாபுரம், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, ஆலந்துறையாறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல வழிவகை ஏற்படும் என்றார்.
குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், ஞானதிரவியம் எம்.பி., பொதுப்பணித்துறை நீர்ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன் மற்றும்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.