

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று அரசு மருத்துவமனை கரோனா வார்டில் கவச உடை அணிந்து ஆய்வுசெய்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியராக த.பிரபுசங்கர் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். பின்னர் அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் கவச உடை அணிந்து கரோனா வார்டுக்குள் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்த கரோனா தொற்றாளர்களை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் 10,000 லிட்டர் கொள்ளளவுள்ள திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குவசதியையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.முத்துச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி யன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.