குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு

குற்றாலம் பிரதான அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பிரதான அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Updated on
2 min read

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை யில் 42 மி.மீ. மழை பதிவானது. அடவிநயி னார் அணையில் 23 மி.மீ., கருப்பாநதி அணையில் 16 மி.மீ., செங்கோட்டையில் 19 மி.மீ., தென்காசியில் 13 மி.மீ., கடனாநதி அணையில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., ஆய்க்குடியில் 1.60 மி.மீ. மழை பதிவானது.

மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 104 கனஅடி நீர் வந்தது. பாசனத் துக்கு 60 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 74.90 அடியாக இருந்தது. ராமநதி அணைக்கு 40 கனஅடி நீர் வந்தது. 40 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 66 அடியாக இருந்தது. கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி நீர் வந்தது. 25 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டது. அணை நீர்மட்டம் 60.70 அடியாக இருந்தது. அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 164 கனஅடி நீர் வந்தது. 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. இந்த அணைக்கு வரும் 67 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைப்பகுதிகளில் 42 மி.மீ., சேர்வலாறு, கொடுமுடியாறு அணைப்பகுதிகளில் 20 மி.மீ., கருப்பாநதி அணையில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,695 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,205 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 133.10 அடியாக இருந்தது. இதுபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 144.85 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 367 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 675 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பாலமோரில் 34 மிமீ மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. மலையோரம், மற்றும் அணைப் பகுதிகளில் நேற்று சாரல் மழை பொழிந்தது.

அதிகபட்சமாக பாலமோரில் 34 மிமீ மழை பெய்திருந்தது. சிற்றாறு ஒன்றில் 18 மிமீ, பேச்சிப்பாறையில் 21, பெருஞ்சாணியில் 17, புத்தன்அணையில் 15, சிவலோகத்தில் 19, சுருளோடு மற்றும் அடையாமடையில் தலா 7 மிமீ மழை பெய்திருந்தது.

மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,065 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 45.29 அடியாக உள்ளது. 969 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71.03 அடியாக உள்ளது. 925 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. சிற்றாறு ஒன்றில் 16.66 அடி, சிற்றாறு இரண்டில் 16.76, பொய்கையில் 26.40, மாம்பழத்துறையாறில் 54.12, முக்கடல் அணையில் 25 அடி தண்ணீர் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in