Last Updated : 16 Jun, 2021 04:42 PM

 

Published : 16 Jun 2021 04:42 PM
Last Updated : 16 Jun 2021 04:42 PM

தூத்துக்குடியில் கரோனா 3-வது அலையை சமாளிப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர்

தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பூ மார்க்கெட் பகுதியில் நடைபெறும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ.பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதனை சமாளிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலரான கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரூ.10 கோடிக்கு மேலான திட்டப்பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தூத்துக்குடிக்கு வந்து தனது ஆய்வுப் பணிகளை தொடங்கினார்.

முதல் கட்டமாக நேற்று மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரூ.10 கோடிக்கு மேலான திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து இன்று கள ஆய்வுப் பணிகளை அவர் மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை பைபாஸ் ரவுண்டானா அருகில் ரூ.83.87 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வெள்ளநீர் தடுப்பு கால்வாய் பணிகள், மீளவிட்டான் பகுதியில் ரூ.69.66 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வெள்ள நீர் வடிகால் அமைக்கும் பணிகள், 3-ம் மைல் பகுதியில் ரூ.78.88 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பக்கிள் ஓடை மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகள், தூத்துக்குடி மாநகராட்சி சி.வா.குளம் ரூ.11.17 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள், தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பகுதியில் ரூ.7.62 கோடி மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணிகள், தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பூ மார்க்கெட் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல மாடி வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் மற்றும் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் ரூ.53 கோடி மதிப்பீட்டில் மறு கட்டமைப்பு பணிகள் ஆகிய பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கோ.பிரகாஷ் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 200 முதல் 250 என்ற அளவில் உள்ளது. தொற்று உறுதி செய்வோர் விகிதம் 30 சதவீதத்தில் இருந்து தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது. இன்னும் இதனை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நுண் திட்டங்களை வகுத்துள்ளோம். கரோனா 2-வது அலை தாக்குதலில் இருந்து மீளவேண்டும் என்பது தான் முதல் கட்ட பணி. அதனை தொடர்ந்து 3-வது அலை ஏற்பட்டால் அதனை சமாளிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதாகும். அதற்கான பணிகளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியிருக்கிறோம்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் விரைவாக உருவாக்கி அடுத்த அலை வருவதற்கு முன்பாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்துள்ளோம். குறிப்பாக தூத்துக்குடியில் ரூ.950 மதிப்பீட்டில் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. வெளியே இருந்து மழைநீர் நகருக்குள் வராமல் தடுத்து கடலுக்கு அனுப்பும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 748 கிராமங்களுக்கான ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம், 93 கிராமங்களுக்கான ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் முடிவடைந்து சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை ஒரு வாரத்தில் முடிவடையும். எனவே, 2 கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும்.

இதேபோல் புதிய திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள 53 குளங்களை முழுமையாக தூர்வாரும் திட்டம், திருச்செந்தூர் நகருக்குள் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையிலான திட்டம் போன்ற பல திட்டங்களை ஆலோசனை செய்துள்ளோம். இது தொடர்பாக அறிக்கையை மாதம் தோறும் தலைமைச் செயலரிடம் அளிப்போம். அதன்பேரில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x