

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது துறையின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் கட்சிக்காரர்களை விலைக்கு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார் என கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தெரிவித்தார்.
இங்கிலாந்து வாழ் சமுதாய மக்கள் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தமிழக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.,வுமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 2 ஆக்சிஜன் உருளைகள், 2 இசிஜி இயந்திரம், 200 ஆக்சிஜன் முகக்கவசம் ஆகியவற்றை சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் முருகவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன் ஆகியோரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அதிமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சீனிராஜ், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, அய்யாத்துரைப்பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், த.மா.கா., நகரத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கரோனா 2-வது அலை தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதில், அரசியல் பாராமல் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டபேரவை எதிர்கட்சி பொருளாளராக பணியாற்ற என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இது கோவில்பட்டி தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்கு அதிமுக அளித்துள்ள அங்கீகாரமாகக் கருதுகிறேன். இதற்காக தொகுதி மக்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக உறுப்பினராக இருந்து தான் கட்சியை விமர்ச்சிக்க முடியும். புகழேந்தி நீக்கப்பட்ட பின்னர் அவரது விமர்சனத்துக்கு பதிலளிப்பது தேவையில்லை.
நீட் தேர்வு என்பது தான் அதிமுகவின் இறுதியான, உறுதியான நிலைப்பாடு. இதற்காக கடைசி நிமிடம் வரை நாங்கள் காத்திருந்தோம். ஆனால், தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான். தமிழக அரசு இயற்றிய தீர்மானத்துக்கு எதிராக தடை வாங்கியது நளினி சிதம்பரம் தான்.
கரோனா முதல் அலையின் போது 90 சதவீத தளர்வுகள் வழங்கிய பின்னரே டாஸ்மாக் கடைகளை திறந்தோம். அன்று திமுகவினர் போராடினர். ஆனால், இன்று ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில், இவர்கள் தற்போதே டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டனர். இதிலிருந்தே அவர்களது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம்.
அதே போல், மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 2 துறைகள் வழங்கப்பட்டுள்ளன. மீன் வளத்துறையை கொண்டு, மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு பாலம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை செய்யலாம். அதிமுக ஆட்சியின் போது கோவில்பட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணியை துரிதப்படுத்தலாம்.
ஆனால், அவற்றை செய்யாமல் ஆடுபுலி ஆட்டம் ஆடி, கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆட்சிக்கு வந்த ஒரு மாதமாகவில்லை. நாங்களும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம். மக்கள் தீர்ப்பின்படி யார் எந்த பொறுப்பில் இருந்தார்களோ அந்த பொறுப்பிலேயே இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்ற பண்பாட்டோடு இருந்தோம். இதனை மக்கள் கவனித்துக் கொண்டு தான் உள்ளனர். அரசியல் என்பது ஒரு வட்டம் தான். அது சுற்றி வரும்.
அதிமுகவுக்கு யாராலும் சாதி சாயம் பூச முடியாது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். கோவில்பட்டியில் சித்த மருத்துவ பிரிவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன், என்றார் அவர்.