

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 10 இடங்களில் கிணறு அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காய்குறிச்சி வடத்தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சர்வதேச ஏலத்திற்கு அழைப்பாணை விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என, அக்கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். மேலும், ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதியைத் தமிழக அரசு ஒருபோதும் வழங்காது என, முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 10 இடங்களில் கிணறு அமைக்க அனுமதி கேட்டு, தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் இன்று (ஜூன் 16) கடிதம் எழுதியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்பதால், சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பத்தில் ஓஎன்ஜிசி குறிப்பிட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.