Last Updated : 16 Jun, 2021 03:00 PM

 

Published : 16 Jun 2021 03:00 PM
Last Updated : 16 Jun 2021 03:00 PM

விழுப்புரம் அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு

சோழர் காலக் கல்வெட்டு

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள கொட்டப்பாக்கத்து வேலி கிராமத்தின் கிழக்கு பகுதியில் நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் செங்குட்டுவன், திருவாமாத்தூர் சரவணகுமார், கரிகால சோழன் பசுமை மீட்புப் படையின் ஒருங்கிணைப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மண்ணில் பெருமளவு புதைந்த நிலையில் பலகைக் கல் இருப்பதைக் கண்டறிந்தனர். அது, மதகு வீரன் அல்லது மதுரை வீரன் என்று அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியினரின் ஒத்துழைப்புடன் கல்லைச் சுற்றிலும் இருந்த மண் அகற்றப்பட்டது. அப்போது, பலகைக் கல்லின் ஒரு பக்கத்தில் மூத்ததேவி சிற்பமும் இன்னொரு பக்கத்தில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

பல்லவர் கால மூத்ததேவி சிற்பம்

இது குறித்து, எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:

"சுமார் 5 அடி உயரமுள்ள அந்தப் பலகைக் கல்லின் ஒரு பகுதியில் மூத்ததேவியின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இதன் காலம் கி.பி.8-ம் நூற்றாண்டாகும். பல்லவர் காலத்தில் மூத்ததேவி வழிபாடு சிறப்புற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலகைக் கல்லின் இன்னொரு பக்கத்தில் 17 வரியிலான கல்வெட்டு வாசகம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, மூத்தத் தொல்லியல் ஆய்வாளர் சு.ராஜகோபால் கூறியது என்னவெனில், இக்கல்வெட்டின் காலம் கி.பி.1216 ஆகும்.

இப்பகுதியில் ஏரி தூம்பு வைத்தவர் குறித்தும், இதனை நிறைவேற்றிய அதிகாரி குறித்தும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 12, 13 ஆம் நூற்றாண்டில் சேட்டை-யின் (மூத்ததேவி) வழிபாடு இல்லாததால், அந்தச் சிற்பமுள்ள பலகைக் கல்லை உடைத்து ஒரு பகுதியின் பின்புறம் இக்கல்வெட்டினைப் பொறித்துள்ளனர். 'மதகு வீரன்' என்று மக்கள் இதனைப் பெயரிட்டு அழைப்பது ஒருவாறு பொருந்துகிறது".

பலகைக் கல்லில் மூத்த தேவி சிற்பம் பொறிக்கப்பட்டு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்லின் இன்னொரு பக்கத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிற்பம் மற்றும் கல்வெட்டினை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்று கிராமத்தவர்களிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்".

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x