

பாஜகவுக்கு சென்றதால்தான் உயர்ந்த பதவி அடைந்துள்ளேன் என்று திமுக எம்எல்ஏவுக்கு புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பதில் தந்தார்.
புதுவை சட்டப்பேரவையின் 21-வது பேரவைத்தலைவராக செல்வம் இன்று பதவியேற்றார். அவரை இருக்கைக்கு அழைக்கும் முன் தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமிநாராயணன், செல்வத்தை வாழ்த்தி பேசியதாவது: "புதிதாக பொறுப்பேற்கும் செல்வம் 1964ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தவர்.
விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்தவர். சிறு வயது முதல் சமூக பணியிலும், பொதுப்பணியிலும் நாட்டம் உள்ளவர். ஏம்பலம் கூட்டுறவு சங்க தலைவராக 6 ஆண்டு பணியாற்றியவர். சிறந்த கூட்டுறவு சங்கம் என விருது பெற்றவர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராகவும் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதோடு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பணியாற்றினார்.
புதுவை மக்கள் இயக்கத்தின் தலைவர், ஒலிம்பிக் சங்கத்தின் துணைத்தலைவர், பூப்பந்து, நெட்பால் சங்க தலைவர் என பல பதவிகளை வகித்தவர்." என்று குறிப்பிட்டார்.
பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற செல்வம் கடந்த 1982 முதல் திமுகவில் செயல்பட்டு வந்தார். பின்னர் 1988ல் இருந்து பல ஆண்டுகள் தொகுதி செயலராகவும் இருந்தார். எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தராததால் கடந்த 2016ல் திமுகவிலிருந்து வெளியேறினார். பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவில் போட்டியிட்டு பேரவைத்தலைவராகியுள்ளார். புதுவை சட்டப்பேரவையில் பேரவைத்தலைவரை வாழ்த்தி எம்எல்ஏக்கள் பேசினர்.
திமுக உறுப்பினர் நாஜிம் பேசும்போது, "புதிய அரசின் அமைச்சர்கள் யார்? என நாடே எதிர்பார்த்து நிற்கிறது. இதை முதல்வர் இன்றே அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேன். புதிய பேரவைத் தலைவர் பற்றிய குறிப்பில் அவர் திமுகவில் நீண்டகாலம் இடம்பெற்றிருந்ததை குறிப்பிடவில்லை. திமுகவின் தொகுதி செயலாளராக பல ஆண்டு அவர் பதவி வகித்தார்" என்று குறிப்பிட்டார்.
அப்போது பேரவைத் தலைவர் செல்வம் குறுக்கிட்டு, "பாஜகவுக்கு இடம் மாறியதால்தான் இந்த உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். அங்கேயே (திமுக) இருந்திருந்தால் நான் இன்றுவரை அப்படியேதான் இருந்திருப்பேன். இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும்" என்று குறிப்பிட்டார்.
மீண்டும் உறுப்பினர் நாஜிம் பேசும்போது, "யாருக்கு என்ன தரவேண்டும் என்பது கட்சித்தலைமைக்கு தெரியும். திமுகவால் பெரும் பதவிகளை பெற்றவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்" என்றார்.
அதற்கு பேரவைத்தலைவர் செல்வம், "என்னை இந்த பதவிக்கு பரிந்துரை செய்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.
பேரவைத் தலைவர் செல்வம் ஏற்புரையில், "இந்த மன்றத்தில் எளிய குடும்பத்திலிருந்து வந்து மக்கள் பணியாற்றி இந்த இடத்துக்கு வந்துள்ளேன். ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு ஒரு இடத்தில் தவறும்போது, உழைப்பும், நேர்மையும் இருந்தால் உயர்வு நிச்சயம் உண்டு. நடுநிலை என்ற வார்த்தையை இதுவரை பயன்படுத்தவில்லை என யாரும் அச்சப்பட தேவையில்லை. பேரவை இருக்கையே நடுநிலை என்ற பொருள் கொண்டதுதான். நடுநிலை தவறாமல் சபையை நடத்த உறுப்பினராகிய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்." என்று குறிப்பிட்டார்.