

விழுப்புரத்தில் நியாயவிலைக் கடையில் 14 வகையான மளிகைப்பொருட்கள் முழுமையாக வழங்கவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று முதல் (ஜூன் 15) விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இப்படி விநியோகிக்கப்படும் பொருட்களில் அரசு அறிவித்த பொருட்கள் அனைத்தும் வழங்கப்படாமல் குறைந்த அளவே வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
நேற்று செஞ்சி அருகே தேவனூர் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் கடலை பருப்பு மற்றும் குண்டு உளுந்தை தவிர மற்ற பொருட்களை வழங்குவதாக அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அமைச்சர் மஸ்தான் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கடை விற்பனையாளர் கர்ணனிடன் கேட்டபோது, அவர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மணிநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் மளிகை பொருட்கள் தொகுப்பில் குறைவான பொருட்களே வழங்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, விற்பனையாளர் வேல்முருகனிடம் கேட்டபோது, "இக்கடைக்கு 755 குடும்ப அட்டைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அட்டைகளுக்கு வழங்க வேண்டிய மளிகைப்பொருட்களில், 138 மஞ்சள் தூள் பாக்கெட்டுகள், 52 சீரகம் பாக்கெட்டுகள், 8 உளுந்து பாக்கெட்டுகள், 2 சர்க்கரை பாக்கெட்டுகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு பொறுப்பாளர் சத்தியமூர்த்தி குறைவாக வழங்கினார். இதனால்தான் குறைவாக வழங்கப்பட்டது" என்றார்.
மேலும், இது குறித்து, கிடங்கு பொறுப்பாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, "உதாரணமாக, 408 அட்டைகள் என்றால், அதை 100, 50 கணக்கில் மொத்தமாகவும், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தனியாகவும் வழங்கப்படுகிறது. நீங்கள் சொல்லும் விற்பனையாளர் மாற்றிமாற்றி பேசுகிறார். அப்படி குறைவாக வழங்கப்படுவதில்லை" என்றார்.
இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்படுவது விற்பனையாளர்தான் என்பதால் நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவது கண்காணிக்கப்படுகிறதா என, கூட்டுறவுத்துறையின் இணைப்பதிவாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, "விழுப்புரம் மாவட்டத்திற்கு இப்போது வரை 35 சதவீத மளிகைப் பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுமையாக வந்துவிடும்.
35 சதவீதம் வந்துள்ள 14 வகையான மளிகைப் பொருட்களை கணக்கிட்டு, சோதனை மேற்கொண்டுதான் நாங்கள் பெற்று கடைகளுக்கு அனுப்பிவைக்கிறோம். இதில், தவறேதும் நடைபெற வாய்ப்பில்லை. சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.