தமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்

தமிழகத்தில் தடுப்பூசி இல்லை; அறிவிக்கப்படாத மின்தடை: ஜெயக்குமார் கண்டனம்
Updated on
1 min read

தமிழகத்தில் எங்கு சென்றாலும் கரோனா தடுப்பூசியே இல்லை என்றும் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரத் தட்டுப்பாடு உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

''கடந்த கால திமுக ஆட்சியின்போது மாநில உரிமைகளை உரிமைகள் பறிபோயின. தற்போது திமுக தலைவர் மாநில உரிமைகளை நிலைநாட்டுவாரா என்பதில் எங்களுக்கு நிச்சயம் சந்தேகம் உள்ளது. கரோனா தொற்றைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு முழுவதும் எங்கே சென்றாலும் கரோனா தடுப்பூசி இல்லை என்ற பலகையைத்தான் பார்க்க முடிகிறது.

'இல்லை', 'இல்லை' என்று சொல்வதற்கு ஒரு அரசாங்கம். ஏன் அரசு முழுமையான முயற்சி எடுத்து தடுப்பூசிகளைப் பெறவில்லை? தமிழகத்தில் இதுவரை ஒரு கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சுமார் 5 கோடிக்கும் மேற்பட்டோர் இன்னும் போட வேண்டி உள்ளது. ஆனால் தடுப்பூசிப் பற்றாக்குறை நிலவுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின்தடை நிலவுகிறது. எங்கள் ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையின் பெயரில் மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மின் மிகை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நிதி நிலைமையும் சீராக இருக்கும்படி நல்ல நிர்வாகத்தை அளித்தார்.

ஆனால் இன்று மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்பதே தெரியவில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இதேபோன்ற ஒரு அவல நிலைதான் நிலவுகிறது. இது கண்டனத்துக்குரிய ஒன்று''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in