

புதுச்சேரியில் வந்துள்ள பாஜக அலை தமிழகத்திலும் வரும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
புதுச்சேரி பாஜகவில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக பேரவைத் தலைவராக செல்வம் பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ் மண்ணில் பாஜகவைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகளைத தெரிவிக்கிறேன். பாஜக தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பாஜக பெற்று வருகிறது. தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும்.
மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் திமுக வெற்றி பெற்றது. ஆனால், தற்போது மதுக்கடைகளைத் திறந்துள்ளனர். கருத்துகளைச் சொல்பவர்கள் மீது வழக்குப் பதிவு என்பது கண்டிக்கத்தக்கது. அனைத்து சமுதாயத்தினரும் பல கோயில்களில் அர்ச்சகராக உள்ளனர். இது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான். சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் என்பது தனி மனிதனின் குற்றம். இதற்காக நிர்வாகத்தைக் குறைகூற முடியாது".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.