Published : 16 Jun 2021 12:25 PM
Last Updated : 16 Jun 2021 12:25 PM

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் பதவியேற்பு

ஏ.கே.எஸ்.விஜயன்: கோப்புப்படம்

டெல்லி

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் இன்று வைகை இல்லத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 17) டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளார். அப்போது, தமிழகத்துக்கான நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்.

இதனிடையே, திமுக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கடந்த 14-ம் தேதி நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக் காலம் ஓராண்டாகும்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999, 2004, 2009 மக்களவைத் தேர்தலில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவர், தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாகச் செயல்படுபவர் ஆவார். அந்த வகையில், இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன், வைகை இல்லத்தில் இன்று (ஜூன் 16) பதவியேற்றுக்கொண்டார். டெல்லி வைகை இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x