அன்புமணி: கோப்புப்படம்
அன்புமணி: கோப்புப்படம்

மதுபோதை தகராறுகளில் 5 பேர் படுகொலை; தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: அன்புமணி

Published on

தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், ஜூன் 14 முதல் வரும் 21-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 14-ம் தேதி திறக்கப்பட்டன.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை இச்சூழலில் திறப்பது தொற்று பாதிப்பை அதிகப்படுத்தும் என்றும், மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதாலேயே மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான திங்கட்கிழமை குடிபோதையில் நடந்த மோதல்களில் சென்னையில் இருவர், மதுரையில் மூவர் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் குடிபோதை கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

மது கரோனாவைப் பரப்புவது மட்டுமின்றி, கொலைகளுக்கும் காரணமாக இருப்பது மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே உறுதியாகிவிட்டது. அடுத்து வரும் நாட்களிலும் அனைத்து வகை குற்றங்களும் அதிகரிக்க மதுவே முதன்மைக் காரணமாக இருக்கப் போகிறது!

மது அனைத்து வழிகளிலும் அழிவு சக்தி தான்... எந்த வகையிலும் ஆக்க சக்தி கிடையாது. எனவே, தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in