

இளைஞர்கள் உண்மையான அன்பு, பாசத்துடன் முதியோரைப் பேணி காக்க வேண்டும் என்று முதியோர் நல அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர்வி.எஸ்.நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாளையொட்டி ‘இந்து தமிழ் திசை’ மற்றும் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை; இதுஅறிவுரை அல்ல, ஆலோசனை’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இக் கருத்தரங்கில் மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசியதாவது:
முதியோர் மீது தாக்குதல்
கடந்த காலங்களில் முதியோர்கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டனர். தற்போது, முதியோர் மீது மனம்,உடல்ரீதியான தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் முதல் வசதியானவர்கள் வரை நடைபெற்று வருகிறது.
கிராமத்தில் இன்னும் கூட்டுக்குடும்பம் இருப்பதால் முதியோரைதுன்புறுத்துவது அவ்வளவாக இல்லை. நாட்டில் 32 சதவீதம் முதியோர் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது, மூன்றில் ஒரு முதியவர் பாதிக்கப்படுகிறார். 56 சதவீதம் முதியோர் தங்களுடைய மகன்களால் அவமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது, இரண்டில் ஒரு முதியவர் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்.
மகள்களும் அவமதிக்கின்றனர்
மருமகள்களால் 23 சதவீதம் முதியோர் துன்புறுத்தல்களை அனுபவித்து வருகின்றனர். மகள்களும் கூட முதியோரை அவமதிக்கும் செயல் நடந்து வருகிறது என்று‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ நடத்தியஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதற்கு தீர்வு காண நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 15-ம்தேதி பள்ளி மாணவர்களுக்கு முதியோரை மதித்தல் பற்றி குடியரசுதலைவர் வானொலி மூலம் உரையாற்ற வேண்டும். பள்ளிகளில் முதியோர் கொடுமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்க வைக்க வேண்டும். முதியோர்களை நன்றாக கவனித்து வரும் இளைஞர்களில் மாநிலத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்து‘பத்ம’ விருதுக்கு இணையாக விருது வழங்க வேண்டும்.
முதியோரை மதிக்கும் சமுதாயம்
பள்ளி மாணவர்களை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி, முதியோர் கொடுமை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முதியோரை மதிக்கும் சமுதாயம் உருவாகும்.
இளைஞர்கள் உண்மையான அன்பு, பாசத்தை வழங்கி முதியோரைப் பேணி காக்க வேண்டும். இளைய தலைமுறையும் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதை உணர்ந்து, முதியோரும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் வி.எஸ்.நடராஜன் பேசினார்.