

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், கரோனாவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களைப் போக்க அரிசிகுடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த மே மாதம் 2 கோடியே 9 லட்சத்து 81,900 அரிசி குடும்பஅட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணியை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினமான கடந்த ஜூன் 3-ம் தேதிமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அத்துடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க, கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்து, புளி, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், டீத்தூள், குளியல் மற்றும் துணி சோப்பு என 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடியில் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, 2 கோடியே 9 லட்சத்து 81,900 அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ரூ.4,196.38 கோடிநிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கரோனா நிவாரணம் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை வழங்குவதற்கு தினசரி 200 அல்லது 300 என்ற வகையில் குடும்ப அட்டைகள் அடிப்படையில் கடந்த 11-ம் தேதிமுதல் 14-ம் தேதி வரை வீடுவீடாக நியாயவிலைக்கடை ஊழியர்களால் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா நிவாரணம் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணிதமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் நேற்று தொடங்கியது. சில இடங்களில் கரோனாவழிமுறைகள் பின்பற்றப்படாத நிலை காணப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் கடை பணியாளர்கள் பொதுமக்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்றும்படி கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே, இம்மாதம் இறுதி வரை நிவாரணம் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பை நியாயவிலைக்கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். எனவே கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.