கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி உள்ள குழந்தைகளுக்கு நிவாரண வைப்புத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கரோனா முதல்அலையைவிட 2-ம் அலையில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர் அதிகம். இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்நிலையில், கடந்த மே 29-ம் தேதி இதுகுறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரண தொகுப்பை அறிவித்தார். அதன்படி, கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டு, 18 வயது நிறைவடையும்போது வட்டியுடன் வழங்கப்படும். அந்தகுழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரைகல்வி மற்றும் விடுதிக் கட்டணம்உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லதுதந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அவர்கள் 18 வயது வரை வழங்கப்படும். ஏற்கெனவே தாய் அல்லதுதந்தையை இழந்து, தற்போது கரோனா தொற்றால் பெற்றோரில் மற்றொருவரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூ.5 லட்சம் அவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்படும். இக்குழந்தைகளுக்கும் நோய்த்தொற்றால் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வெளியிட, நிதித்துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி, அரசால் வழங்கப்படும் ரூ.5 லட்சம், மின் நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்படும். பாதுகாவலருடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பராமரிப்புத் தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நிவாரணத்தை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், பெற்றோரை இழந்த குழந்தைகள் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வைப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலர்உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in