

கரோனா 3-வது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்ற செய்திகள் வருவதால், தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளார்.
‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 8-ம் தேதி `அடுத்த அலையிலிருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?' என்ற தலைப்பில், பொதுநல மருத்துவர் கு.கணேசன் எழுதிய கட்டுரை வெளியானது. அதில், 3-ம் அலை தாக்கினால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிர தொற்றாக மாறலாம். பொதுசுகாதார துறைக்கு இது சவாலாகஅமையும். எனவே, குழந்தைகளுக்கான மருத்துவக் கட்டமைப்புகள், உபகரணங்களை இப்போதிருந்தே வலுப்படுத்துவதும், குழந்தை மருத்துவர்களையும், பணியாளர்களையும் அதிகப்படுத்துவதும் முக்கியம். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தயாராக வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று 3-ம் அலையின்போது 18 வயதுக்கு உட்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அதிகபாதிப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அதைகருத்தில்கொண்டு, மருத்துவமனை டீன்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.
மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிர்வாக அதிகாரியை பிரத்யேகமாக நியமிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேக ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவை கட்டமைக்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தையும் மருத்துவமனை டீன்களும், நிர்வாகிகளும் பின்பற்ற வேண்டும். அது தொடர்பான அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.