

பொதுவாக நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் 3 விதங்களில் அளிக்கப்படுகிறது. ஒன்று, திரவநிலை ஆக்சிஜனை மருத்துவமனைகளில் உள்ள பெரிய டேங்குகளில் நிரப்பி, அதிலிருந்து பைப்லைன் மூலம் கொண்டுசென்று அளிப்பது, இரண்டாவது ஆக்சிஜன் நிரப்பிய சிலிண்டர்கள் மூலம் அளிப்பது, மூன்றாவது ஆக்சிஜன் செறிவூட்டிகள் (கான்சன்ட்ரேட்டர்).
சந்தையில் உள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெளிக்காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து, நைட்ரஜனை வெளியிடுகின்றன. இந்த சிறிய கருவியை ஒரேநேரத்தில் ஒரு நோயாளிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் தொடர்ந்து 24 மணி நேரமும் பயன்படுத்த முடியாது. மேலும், இதற்கு தொடர் பராமரிப்பும் அவசியம்.
எனவே, இவை மூன்றுக்கும் மாற்றாக, மிகக் குறுகிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய புதிய அமைப்பை வடிவமைத்து அதனை அரசு மருத்துவமனைகளில் நிறுவி பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர் கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 'ஃபாரடே ஓசோன்' (Faraday Ozone) நிறுவனத்தினர்.
செறிவூட்டிகளின் சிறப்பம்சங்கள்
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விவேகானந்தன், ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவு தலைவர் ராகுல் ஆகியோர் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவை அதிகமானதைத் தொடர்ந்து கோவை ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த டாக்டர் பாலவெங்கட் மூலம் எங்களை தொடர்புகொண்டனர். அந்த நேரத்தில், ஆக்சிஜன் படுக்கைகளுக்கு நோயாளிகள் பலர் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலை இருந்தது. எனவே, குறுகிய காலத்தில் விரைவாக ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற வேண்டி இருந்ததால், மருத்துவமனையிலேயே தன்னிச்சையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அமைப்பை உருவாக்கினோம். இதன்மூலம், கோவை அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 40 படுக்கைகளுக்கான ஆக்சிஜன் வசதி பயன்பாட்டுக்கு வந்தது.
எங்களின் வடிவமைப்பில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மின்இணைப்பு மட்டும் இருந்தால் போதும். இதற்கு மூலப்பொருள் காற்று மட்டுமே. எங்கள் வடிவமைப்பின்படி, ஒரு செறிவூட்டி (கான்சன்ட்ரேட்டர்) மூலம் அருகருகே உள்ள இரு படுக்கைகளில் நோயாளிகளுக்கு தலா 5 லிட்டர் வரையிலான ஆக்சிஜனை 24 மணி நேரமும் தடையில்லாமல் வழங்க முடியும். இந்த செறிவூட்டியை ஒரு நோயாளி மட்டும் பயன்படுத்தினால், நிமிடத்துக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைக்கும். சந்தையில் உள்ள செறிவூட்டியைவிட இதை இயக்க 25 மடங்கு குறைவான மின்சாரமே போதும்.
இதுவரை கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 25 அரசு மருத்துவமனைகளில் தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பணிகளை நிறைவு செய்துள்ளோம். இதன்மூலம், கரோனா தொற்றின் அடுத்த அலை வந்தாலும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை அளிக்க முடியும். இதில், அதிகபட்சமாக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 440 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். வெளியில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதைவிட, மின்சாரத்தை பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஒரு லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய 50 சதவீதம் வரை செலவு குறைவாகும்.உலகில் வேறு எங்கும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை யாரும் பயன்படுத்தவில்லை. எங்களின் இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். சமூகத்தின் தேவை கருதி இந்தத் தொழில்நுட்பத்தை மற்றவர்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அந்த காப்புரிமை (ஓபன் பேடன்ட்) இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.