நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்; தயார் நிலையில் 456 நிவாரண முகாம்கள்: அப்பர்பவானியில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பதிவு

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்; தயார் நிலையில் 456 நிவாரண முகாம்கள்: அப்பர்பவானியில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பதிவு
Updated on
2 min read

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக, ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு உதகை-குன்னூர் சாலை மற்றும் புதுமந்து பகுதிகளில் காற்றுடன் கன மழை பெய்ததால், மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய பின்பு, போக்குவரத்து சீரானது. பலத்த காற்று வீசுவதால், மரங்களுக்கு அருகே நிற்பது, வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை, போலீஸார், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, அதிகமாக மழை பெய்யும் இடங்களில் பாதிப்புஏற்படுகிறதா என்று கண்காணித்து வருகின்றனர். இதுதவிர மீட்பு குழுக்களில் உள்ள முதல்நிலைப் பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த 42 அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் 456 நிவாரணமுகாம்கள் தயார் நிலையில் உள்ளன.தாழ்வான பகுதியில் வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தாழ்வான மற்றும் வெள்ளஅபாயம், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அவசரகாலங்களில் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அப்பர் பவானியில் 109 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அவலாஞ்சி-83, தேவாலா-57, பந்தலூர்-51, கூடலூர்-24, அப்பர் கூடலூர்-22, எமரால்டு-21, நடுவட்டம்-18.5, பாடந்தொரை- 16, சேரங்கோடு-15, ஓவேலி-14, பாலகொலா-12, செருமுள்ளி-12, கிளன்மார்கன்-11, மசினகுடி-11, உதகை-8, குந்தா-8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

வால்பாறையில் கனமழை

கோவை மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை சுரங்கம் வழியாகவரும் மழை நீர், சோலையாறு அணையை சென்றடைகிறது. கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழைபரவலாக பெய்து வருவதால், வெள்ளமலை சுரங்கப் பாதையில்தண்ணீர் வெள்ளம்போல ஓடுகிறது. இதன் காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in