குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 குடியிருப்புகளுடன் ஓராண்டுக்கு ரூ.30,000 பிழைப்புப்படி: ஜெயலலிதா அறிவிப்பு

குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 குடியிருப்புகளுடன் ஓராண்டுக்கு ரூ.30,000 பிழைப்புப்படி: ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு

*

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு முதல்வர் இன்று ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை, குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விசிறி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரகற்று வசதிகள், சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, குப்பைத் தொட்டிகள், தெரு மின்விளக்குகள், கான்கீரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலைக் கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்படும் போது அவர்கள் தங்களது உடைமைகளை தற்போதுள்ள இடத்திலிருந்து மறு குடியமர்வு பகுதிக்கு கொண்டு செல்ல 5000 ரூபாய் இடமாற்றப் படியாகவும், மாதம் 2500 ரூபாய் வீதம், ஓராண்டிற்கு 30,000 ரூபாய் பிழைப்புப் படியாகவும் வழங்கப்படும்.

மறுகுடியமர்வு செய்யும் முதல் மூன்று தினங்களுக்கு உணவு மற்றும் குடிநீரும் அக்குடும்பங்களுக்கு வழங்கப்படும். இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தக் குடியிருப்புகளில் குடியேறும் குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் முகவரி மாற்றம் செய்து தரப்படுவதோடு, அனைத்து மாணவ மாணவியரும் இக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். மேலும், இக்குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in