Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM
புதுச்சேரியின் புதிய அரசில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங் - பாஜக கூட்டணியினர் மக்களைப் பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து நாங்கள் மத்திய பெட்ரோலிய துறைக்கு கடிதம் அனுப்பினோம். இத்திட்டத்துக்காக புதுச்சேரி, காரைக்காலில் நிலம்கையகப்படுத்தினால் விவசாயம், மீன்பிடி தொழில் பாதிக்கும் என வலியுறுத்தினோம். இந்தத் திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். இப்பிரச்னை மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.
ரங்கசாமி கடிதம் எழுத வேண்டும்
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என அம்மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “இத்திட்டத்தால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கும்” என மத்திய அரசுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ஆனால், மத்திய அரசு இவ்விஷயத்தில் பணிவதாக தெரியவில்லை. பெருநிறுவனங்களுக்கு துணையாக நின்று, மக்களைப்பற்றி கவலைப்படாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது.
புதுச்சேரியில் புதிதாக அமைந்த ஆட்சி இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. ரங்கசாமி இத்திட்டத்தை எதிர்த்து மத்திய பெட்ரோலிய துறைக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுத வேண்டும். மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம். ஆனால் அவர்கள் மாநில அரசுகளின் மேல் பழிபோடுகிறார்கள். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக விற்கப்படுகிறது.
புதுச்சேரியில் புதிய அரசுஅமைந்து 45 நாட்கள் ஆகியும்அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காக பேரம் பேசி காலம் கடத்துகிறார்கள். மக்களை கைவிட்டு விட்டார்கள். கரோனாவில் அப்பாவி மக்கள் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை. மக்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்கு சண்டை போடுகிறார்கள்.
தேர்தலின் போது, ‘புதுச் சேரியை நிதி கமிஷனில் சேர்ப்போம், மூடப்பட்ட மில்களைதிறப்போம்’ என பல வாக்குறுதிகளை பாஜக கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் தற்போது நிறைவேற்ற வேண்டும். கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரத்தை புதுச்சேரி அரசு செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT