Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM
தமிழகத்தில் முதன்முறையாக, அனைத்து வகை உயிரினங்களும் வாழ்வதற்கான சூழலோடு ஒருங்கிணைந்த உயிர் சூழல் மண்டலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் மாற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையை அடுத்த முள்ளூரில் கால்நடை பராமரிப்பு துறை வசம் இருந்த 125 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, கடந்த 2017-ல் அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. இதில், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, விடுதி போன்ற கட்டிடங்களுடன், மீதம் இருந்த தரிசு நிலத்தில் ஒரு சில மரங்கள் மட்டுமே இருந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடத்தில் போதுமான எண்ணிக்கையில் மரங்கள் இல்லாதிருந்ததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் முயற்சியால் வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதுடன், வளாகத்தில் உள்ள குளங்களையும் மேம்படுத்தி அனைத்து விதமான உயிரினங்களும் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயிர் சூழல் மண்டலமாக மாற்றப்பட்ட முதல் மருத்துவக் கல்லூரியாக புதுக்கோட்டை உள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சீமைக் கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் மண்டி இருந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு மியாவாக்கி முறையில் மா, பலா, பூவரசு, வேம்பு, மலைவேம்பு, ஆல், அரசு, அத்தி, பனை, புங்கன், பாதாம், நாவல், கொன்றை, கொய்யா, நீர்மருது, மாதுளம், நீர் மருது, சந்தனம், தேக்கு, பூ வகைகள், மூலிகை செடிகள் என 500 மரக்கன்றுகளடன் குறுங்காடு உருவாக்கப்பட்டது.மேலும், படிப்படியாக 2 ஏக்கரில் மொத்தம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதுதவிர, வளாகத்தில் தனித்தனியாகவும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இங்கு, பணிபுரிவோர், மாணவர்கள் என அனைவரும் மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர். கல்லூரியில் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் மரக்கன்றுகள் நட்டு முறையாக பராமரிக்கிறோம்.
வளாகத்தில் உள்ள 4 குளங்களில் ஒரு குளத்தில் கழிவு நீரும், மற்ற குளங்களில் மழை நீரும் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த நீரைக் கொண்டு மரக்கன்றுகளுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது. அனைத்து குளங்களிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
மேலும், பலவகையான நன்னீர் பாசிகள், நுண்ணுயிரினங்கள் உள்ளதால் தண்ணீரும் அசுத்தமாவது தடுக்கப்படுகிறது.
இவ்வாறு, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயிர் சூழல் மண்டலமாக இக்கல்லூரி வளாகம் மாற்றப்பட்டுள்ளது.
இன்னும், சில ஆண்டுகளில் பசுஞ்சோலை வளாகமாக மாற்றப்படும். இதன் மூலம் ஆக்சிஜன் செறிவு அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றார்.
சமூக சேவை அமைப்பினருடன் சேர்ந்து இத்தகைய முன்மாதிரி முயற்சியில் ஈடுபட்டு வரும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT