

கங்கைகொண்டான் எல்காட் பகுதியில் பல நிறுவனங்களை கொண்டுவந்து தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
திருநெல்வேலி அருகே கங்கை கொண்டான் எல்காட் நிறுவனத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையில் கங்கை கொண்டான் எல்காட் திட்டம் கொண்டுவரப் பட்டிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இங்கு எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. 500 ஏக்கர் பரப்பிலுள்ள இந்த இடத்தில் தற்போது 2 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுரைப்படி கங்கைகொண்டான் எல்காட் பகுதிகளில் பல தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வந்து, அதன் மூலம் இப்பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தென்தமிழகத்தில் இருக்கக்கூடிய படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கு வதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தென் தமிழகத்தில் கிராமப் புறங்களில் நன்றாக படித்த இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலை தேடி, பெருநகரங்களுக்கு செல்லக் கூடிய சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு இங்கு தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் திறன் பயிற்சி வழங்கலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.
கங்கைகொண்டான் எல்காட் பகுதியில் தகவல் நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கு, விதிமுறைகளை எளிமையாக்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்டான் எல்காட் பகுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழக முதல்வரின் அறிவுரைப்படி அலைபேசிகளில் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழில் ஒளிபரப்பப்படுகிறது என்றார்.
மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, சா.ஞானதிரவியம் எம்.பி., மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ, எல்காட் மேலாளர் ஜோஸ் மணி உடனிருந்தனர்.