மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததால் தூத்துக்குடியில் உற்சாகமாக கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்ற விசைப்படகுகள். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்ற விசைப்படகுகள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

மீன்பிடித் தடைக்காலம் முடிவடை ந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து 102 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று காலை உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் 420 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தடைக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. ஆனால், கரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் இருப்பதால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தமுள்ள 240 விசைப்படகுகளில் 120 விசைப்படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், மீதமுள்ள 120 விசைப்படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் சுழற்சி முறையில் மீன்பிடிக்க செல்வது என அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் நாளான நேற்று 120 விசைப்படகுகளுக்கு கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதில் 102 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று அதிகாலை 5 மணியளவில் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து உற்சாகமாக கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தூத்துக்குடியை பொறுத்தவரை சரியான மீன்பாடு இல்லாத காரணத்தால் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் தற்போது சுமார் இரண்டரை மாதங்களுக்கு பிறகு நல்ல மீன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

தருவைகுளத்தில் உள்ள விசைப்படகுகளுக்கு மட்டும் பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி உள்ளது. அங்குள்ள 130 விசைப்படகுகளில் பெரும்பாலான படகுகள் நேற்று தங்கு கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றன. இதுபோல் வேம்பார் பகுதியில் இருந்து 42 விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.

சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைக்கு உட்பட்ட சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், தடைக்காலத்தை முன்னிட்டு துறைமுக தங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக தடைக்காலம் முடிந்து இவை கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால், சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.

தமிழக அரசு கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை 21-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், மீன்கள் ஏலம் விடுவது, கேரளா உட்பட வெளியூர்களில் வர்த்தகம் செய்வதில் இடையூறு ஏற்படும். எனவே, 21-ம் தேதி முதல் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in