

ஒரே நேரத்தில் இரு வைகை ஆறு தரைப்பாலங்கள் கட்டுமானப் பணி நடப்பதால் மதுரையின் வடகரை மற்றும் தென்கரைப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு நகரப் பகுதியில் இந்த கரோனா ஊரடங்கிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுரை நகரத்தின் மையப்பகுதியில் வைகை ஆறு ஓடுகிறது. இந்த ஆறு, மதுரையை வடகரை மற்றும் தென்கரை என இரு நகர்ப் பகுதியாகப் பிரிக்கிறது. இந்த இரு பகுதிகளுக்கும் சென்றுவர மக்கள், வாகன ஓட்டிகள், கோரிப்பாளையம் ஏவி மேம்பாலம், சிம்மக்கல் யானைக்கல் பாலம், குருவிக்காரன் சாலை தரைப்பாலம், அருள்தாஸ்புரம் தரைப்பாலம், ஒபுளாபடித்துரை தரைப்பாலம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இதில், அருள்தாஸ்புரம் தரைப்பாலம், இடிக்கப்பட்டுக் கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உயர் மட்ட மேம்பாலமாகக் கட்டப்பட்டது. தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் குருவிக்காரன்சாலையில் உள்ள தரைப்பாலம் இடிக்கப்பட்டு ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த மேம்பாலக் கட்டுமானப் பணி நடப்பதால் இந்தப் பாலத்தை பயன்படுத்தும் வடகரை, தென்கரைப் பகுதி மக்கள் சென்று வருவதற்காக அருகில் மண்போட்டு ஆற்றுக்குள்ளே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வைகை ஆற்றில் வந்த வெள்ளத்தில் இந்த மண் சாலை அடித்துச் செல்லப்பட்டு வாகனங்கள் இந்தச் சாலையில் செல்ல முடியவில்லை. அதனால், அண்ணா நகர் அரவிந்த் கண் மருத்துவமனை, கே.கே.நகர், கணேஷ் ரோடு, காமராஜர் சாலை, தெப்பக்குளம், முனிச்சாலை, அனுப்பானடி உள்ளிட்ட பகுதி மக்கள் தற்போது அண்ணா நகர் உயர்மட்டப் பாலம் அல்லது கோரிப்பாளையம் வழியாக சிம்மக்கல் சென்று காமராஜர் சாலையைச் சுற்றி வரவேண்டியுள்ளது.
இந்நிலையில் குருவிக்காரன் சாலை உயர்மட்டப் பாலம் கட்டுமானப் பணியே இன்னும் முடியாத நிலையில் ஒபுளாபடித்துரை தரைப்பாலத்தை இடித்துவிட்டு, அங்கு ரூ.23 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணி நடக்க உள்ளது. அதற்காக அந்தத் தரைப்பாலம் இடிக்கும் பணி தற்போது தொடங்கி நடக்கிறது. அதனால், தற்போது ஒபுளாபடித்துரை தரைப்பாலத்தையும் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதனால், இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் மக்கள், தற்போது வடகரை, தென்கரைப் பகுதிகளுக்குச் சென்றுவர கோரிப்பாளையம் வழியாகப் பல கி.மீ. தூரம் சென்றுவர வேண்டியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் ஒரு பாலம் கட்டுமானப் பணியை முடித்துவிட்டு மற்றொரு பாலத்தைக் கட்ட வேண்டும். ஆனால், குருவிக்காரன் சாலை உயர்மட்டப் பாலம் கட்டுமானப் பணி நடப்பதற்குள், எந்த திட்டமிடுதலும் இல்லாமல் தற்போது ஒபுளாபடித்துரை பாலத்தையும் இடிக்கின்றனர். ஒரே நேரத்தில் இரு தரைப்பாலத்தையும் மூடப்பட்டு பாலம் கட்டுமானப் பணி நடப்பதால் நகர்ப் பகுதியில் வடகரை, தென்கரைப் பகுதியில் எளிதாக மக்கள் சென்றுவர முடியாததோடு நகர்ப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
அதனால், நெல்பேட்டை, கீழ வெளிவீதி, முனிச்சாலை, இஸ்மாயில் புரம், தயிர் மார்க்கெட் பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். முழுமையாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் நேரத்தில் ஒட்டுமொத்த வாகனங்களும் கோரிப்பாளையம் வழியாகச் சென்றுவந்தால் நகர்ப் பகுதியில் பல மடங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். நகர்ப் பகுதி சாலைகள் ஏற்கெனவே மிகக் குறுகலாக உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டதால் நகரச் சாலைகள் அனைத்தும் பாழாகியுள்ளன. அதனால், அனைத்து வாகனங்களும் இந்தக் குறுகலான சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதனால், கட்டுமானப் பணி நடக்கும் குருவிக்காரன் சாலை பணியை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.