ஆம்பூர் அருகே சோகம்: தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற தொழிலாளி பலி
ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற தொழிலாளி உயிரிழந்தார். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலையில் இன்று (ஜூன் 15) காலை பணிக்கு வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகேயுள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (56) மற்றும் ரத்தினம் (60), ஆம்பூர் அடுத்துள்ள மோதகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (32) ஆகிய மூன்று பேரும் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றுள்ளனர்.
முதலில் ரமேஷ் என்பவர் தொட்டியில் இறங்கியுள்ளார். திடீரென அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், மூன்று பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
இந்தத் தகவலை அடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் சக ஊழியர்கள் விரைந்து சென்று மூவரையும் மீட்டு சோலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவக் குழுவினர் மூன்று பேரையும் பரிசோதித்தபோது சிகிச்சைக்கு வரும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. ரத்தினம் மற்றும் பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் இருந்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாகத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தொழிற்சாலை பகுதியில் ஆய்வு செய்ததுடன் மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினர். பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த ரத்தினம் என்பவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு இல்லை
தோல் தொழிற்சாலையில் சுமார் 12 அடி ஆழமுள்ள தோல் கழிவுநீர்த் தொட்டியில் எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இறங்கி சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். விதிகளைப் பின்பற்றாததே உயிரிழப்பு ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வினோத் ஜாய், தனியார் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். மேலும், இந்த விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
