Published : 15 Jun 2021 05:17 PM
Last Updated : 15 Jun 2021 05:17 PM

கரோனா 3-வது அலை: எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கரோனா 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 12,772 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1,36,884 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 25,561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 254 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று (ஜூன் 14) முதல் வரும் 21-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் சலூன் கடைகள், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

"மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியூ படுக்கை வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசரகாலப் பணிக்காகத் தயார்படுத்திட வேண்டும். பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ளத் தயார்படுத்திட வேண்டும்.

கரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், கரோனா 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகத்தில் கரோனா 3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. கரோனா 3-வது அலையில் 18-வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள் தயாராக இருக்க வேண்டும். கரோனா 3-வது அலை எந்நேரமும் தாக்கலாம். இதன் காரணமாக, குழந்தை மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளும் ஐசியூ வசதியுடன் படுக்கைகளும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதேபோல், குழந்தைகள் மருத்துவப் பிரிவில் நான்கில் ஒரு செவிலியர் அவசரக் காலப் பணி செய்யத் தயாராக இருக்க வேண்டும்".

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x