ராமர் கோயில் அறக்கட்டளை மீதான ஊழல் புகார்; விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்குக் கடிதம்: புதுச்சேரி எம்.பி. முடிவு

ராமர் கோயில் அறக்கட்டளை மீதான ஊழல் புகார்; விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்குக் கடிதம்: புதுச்சேரி எம்.பி. முடிவு

Published on

ராமர் கோயில் அறக்கட்டளை மீதான ஊழல் புகார் பற்றி விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுத உள்ளதாக புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமர் மீது கொண்ட பக்தியால் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் நன்கொடை அளித்துள்ளனர். கட்சி சார்பில்லாமல் காங்கிரஸ் கட்சியினரும் நன்கொடை அளித்துள்ளனர். உலக நாடுகளில் இருந்தும் நன்கொடைகள் ராமர் கோயில் கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நன்கொடை சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. நிலபேரம் நடந்துள்ளது. ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலத்தை ஒருசில நிமிடங்களிலேயே ரூ.18 கோடியை அறக்கட்டளையிடமிருந்து பெற்றுக்கொண்டு நிலத்தை வழங்கியுள்ளனர். முழுமையான ஊழல் நடந்துள்ளது.

பிஎஸ்என்எல் போன்ற மத்திய அரசு நிறுவனங்களை விற்பதைப் போல் ராமரையும் பாஜக விற்றுள்ளது. புனிதத் தன்மையை வியாபாரம் செய்யும் அளவுக்கு வந்துள்ளனர். தவறு நடந்துள்ளது. இது ராம பக்தர்கள் அனைவரிடமும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளேன். ராமர் பக்திக்காக திரட்டப்பட்ட நிதியை சுயநலத்திற்காக கொள்ளை அடிக்கின்றனர். ராம பக்தர்கள் நிலைப்பாட்டில் காங்கிரஸ் எம்.பி. என்ற முறையில் எனது கருத்துகளை குடியரசுத் தலைவருக்கான கடிதத்தில் முன்வைப்பேன்".

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in