Published : 15 Jun 2021 04:03 PM
Last Updated : 15 Jun 2021 04:03 PM

தமிழக அரசின் 7 இலக்குகள்; பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 15) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலகட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அரசு சார்பாக மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளதையும், படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளதையும் முதல்வர் எடுத்துக் கூறினார்.

மேலும், ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதையும், ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பெற்றுத் தட்டுப்பாடு இல்லாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதையும் முதல்வர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், கல்வியில், வேலைவாய்ப்பில், சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!

மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!

எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!

உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!

அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!

ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று தெரிவித்தார்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக, தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த முதல்வர், காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் மத்திய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரோடு மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x