

ஜெயலலிதா இருந்தால் அன்புமணி ராமதாஸ் பேசமுடியுமா? அதற்கு பதில் அளித்தால் நீக்குவீர்களா? கட்சியில் ஓபிஎஸ் பெரும் தவறிழைத்துவிட்டார். கட்சி முழுவதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைக்குள் சென்றுவிட்டது எனப் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, அதிமுக குறித்து விமர்சித்த அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி கொடுத்தார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் எனப் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
“அதிமுக தொண்டர்களோ, நிர்வாகிகளோ புகழேந்தி நீக்கப்பட்டதாகக் கருதவேண்டாம். பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பிணை கொடுத்து அந்த வழக்குக்காக 20 ஆண்டுகாலம் போராடி, அதன் மூலம் பல ஆண்டுகளாக ஜெயலலிதாவின் மதிப்புக்கும், அவரது அன்புக்கும் உரியவனாக விளங்கிய புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரியால் நீக்கப்பட்டிருக்கிறேன் என்பதுதான் செய்தி.
20 சீட்டுகள் கூட அதிமுக வெல்ல அருகதை இல்லை, எங்களால்தான் அதிமுக 47% வாக்குகளைப் பெற்றது. எங்களால்தான் அதிமுக வெற்றி பெற்றது என்று சொன்னார்கள். இது கண்டிக்கத்தக்க விஷயம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை ஒரு சிறிய கட்சியைச் சேர்ந்தவர் விமர்சித்ததைப் பட்டியலிட்டு இப்படிப் பேசலாமா என்று நான் கேட்டது தவறா? அதற்கு என்னைக் கட்சியை விட்டு நீக்குவார்களா? எவ்வளவு கொடூரமான மனிதர் என்பதை இவர் நிரூபித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு அருகதை இல்லாதவர். பியூன் வேலைக்குக் கூட லாயக்கில்லை என்றெல்லாம் பேசியது ஞாபகம் இருக்கிறதா? இப்படியெல்லாம் பேசிய மனிதரை அவரது குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னதற்காக பழிவாங்கப்பட்டிருக்கிறேன் என்றால் இந்தக் கட்சி எந்த நிலைக்குப் போகிறது என்பதை ஒட்டுமொத்தக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிலிருந்து பேசியுள்ளார். சிறைக்குள்ளேயிருந்து பேசும் காலம் விரைவில் வரும். அப்போது நான் பேசுவேன். எடப்பாடி பழனிசாமி அவர்களே ஒரு நல்ல எதிரியைத் தேர்வு செய்துள்ளீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை அன்புமணி ராமதாஸ் தோலுரிக்க வேண்டிய அவசியமில்லை. நானே அரசியலில் தோலுரித்து உங்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்துவேன்.
இன்னும் இரண்டொரு நாட்களில் நான் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறேன். என்னை நீக்கியது குறித்து எவ்விதக் கஷ்டமுமில்லை. நான் சசிகலாவோடும், டிடிவி தினகரனோடும் எவ்விதத் தொடர்பிலும் இல்லை. ஆனால், சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றவர் என்று நாடே கைகொட்டி சிரிக்கும் நேரத்தில் அடுத்த தவறைச் செய்துள்ளீர்கள். சந்திப்போம் பழனிசாமி. பொறுமையாக இருங்கள்.
ஒரு சர்வாதிகாரி ஜனநாயகம் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். இங்கு நான்தான் அனைத்தும், நான்தான் எல்லாம் என்று நினைக்கும் நபர் காதுகளில் நல்லவை விழாது. ஒருவரை நீக்க காரணம் வேண்டும். எதிர்க்கட்சி நம்மை அசிங்கப்படுத்திப் பேசுகிறது. ஜெயலலிதா இருந்தால் இப்படிப் பேசுவாரா அன்புமணி ராமதாஸ்? இவரிடத்தில் நான் முதலிலேயே எதிர்பார்த்தேன். இது திட்டமிட்டுப் பழிவாங்கும் செயல்.
பல விஷயங்கள் உள்ளன. வெளியில் வரும். இனி எடப்பாடி பழனிசாமி தப்பிக்கவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. போகப்போகத்தான் அவருக்குப் புரியும். ஓபிஎஸ் குறித்து நான் தவறாகப் பேச விரும்பவில்லை. இந்த சர்வாதிகாரி முடிவெடுப்பதற்கெல்லாம் அவர் கட்டுப்படும் நிலைக்கு வந்துவிட்டார். கட்சி முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கைக்குள் வந்துவிட்டது.
முதல் நாள் இரவு பேசும்பொழுது துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொன்னோம். ஆனால், அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். நீங்கள் பொறுமையாக இருங்கள். இப்படி ஆகிப்போனது என்று ஓபிஎஸ் சொன்னார். பரவாயில்லை அண்ணே, நான் பார்த்துக்கொள்கிறேன், எடப்பாடி பழனிசாமியை எனக்கு 30 ஆண்டுகளாகத் தெரியும் என்று சொல்லிவிட்டேன்.
அதிமுகவை மீட்டெடுக்கவெல்லாம் முடியாது. அண்ணன் ஓபிஎஸ் பெரிய தவறிழைத்துவிட்டார் என்றுதான் சொல்வேன். கட்சி முழுமையாக அவர்கள் கைக்குப் போய்விட்டது. இனி அதை மீட்டெடுக்க வேண்டியது இனி தொண்டர்கள் கையில்தான் உள்ளது”.
இவ்வாறு புகழேந்தி பேட்டியில் தெரிவித்தார்.